பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர்.
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(19-05-2025)
மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில், 19ம் திகதி அ ன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கணிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில்,நில அளவைக்கு என கொழும்பு தலைமையகத்தில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளரினால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியும், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அனுமதியும் பெற்றுக் கொண்டு நில அளவை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப் பட்டிருந்த போதும், அதற்கு மாறாக அவர்கள் மன்னாரில் இருக்கும் நில அளவை திணைக்களத்திற்கு மாறாக கொழும்பு தலைமையகத்தில் உள்ள நில அளவை திணைக்களத்தில் இருந்து ரோன் மூலம் இப் பிரதேசத்தை அளப்பதற்கு குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மீனவ அமைப்பு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
குறித்த நில அளவை திணைக் களத்தினர் மாஸ் மினரல் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் இங்கு வந்து நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுத்ததாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்தார்.
உரிய முறையில் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல் குறித்த பகுதிக்கு வருகை தந்து ரோன் கேமரா மூலம் நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கை களை குறித்த குழுவினர் முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக இம்மாத இறுதியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்,அதன் பின்னர் இவ்விடயம் குறித்து தீர்மானம் எடுக்கப் பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கையை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப் படும் என தெரிவிக்கப் பட்ட நிலையில், நிலையில் கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்களத்தினர் குறித்த நடவடிக்கையை கை விட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் குறித்த குழுவினர் முரண்பாட்டில் ஈடுபட்ட தெரிய வருகிறது.
எதிர்வரும் 28 ஆம் திகதி இடம் பெற உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நில அளவைக்கான அனுமதியை வழங்கப் போவதில்லை.
இத்திட்டம் நடைமுறைப்படுத்த படக் கூடாது.இதனால் மன்னார் தீவு முழுமையாக பாதிக்கப்படும்.எனவே கரையோர மணல் அகழ்வுக்கு மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள் என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.